PUBLIC NEWS TV - புதிய புயல் , மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் மீன்வளத் துறை அறிவுரை..!

PUBLISHED:04-Dec-2019

சென்னை :- 

தென்மேற்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இந்தியப் பெருங்கடலில் நிலைக்கொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தீவிரப் புயலாக மாற வாய்ப்புள்ளதால் 

வங்காளவிரிகுடா மற்றும் குமரிக்கடற்கரை பகுதிகளில் இயங்கும் மீன்பிடிப் படகுகளுக்கு மீன்வளத் துறை மூலம் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்றும் , ஏற்கனவே ஆழ்கடல் மீன்பிடிப்பில் ஈடுபட்டிருக்கும் விசைப்படகுகளை உடனடியாக அருகிலுள்ள கடற்கரைப் பகுதிகளுக்கு பத்திரமாக திரும்பிடவும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. 

இந்த வானிலை எச்சரிக்கை ஆழ்கடல் மீன்பிடிப்பில் ஈடுபட்டிருந்த மீனவர் , கிராம பங்குத் தந்தையர்கள் , மீனவ பிரதிநிதிகள் மற்றும் படகு உரிமையாளரின் குடும்பங்களுக்கு நேரிடையாகவும் தெரிவிக்கப்பட்டு , இதனை ஆழ்கடல் மீன்பிடிப்பில் ஈடுபட்டிருக்கும் படகுகளுக்கு தெரிவித்திட கேட்டுக் கொள்ளப்பட்டது. 

சுமார் 50 விசைப்படகுகள் , 650 மீனவர்களுடன் கோவாவிலிருந்து 250 முதல் 270 நாட்டிக்கல் மைல் தொலைவில் மீன்பிடித்துக் கொண்டிருப்பதாகவும் , அப்பகுதியில் காற்றின் வேகம் மிகவும் அதிகமாக இருப்பதால் அவர்களை உடனடியாக பாதுகாத்திட உரிய நடவடிக்கை எடுத்திட , கோவா , மும்பை மற்றும் கொச்சின் இந்திய கப்பல்படை மற்றும் இந்திய கடலோர காவல்படையினரிடம் கொளச்சல் மீன்துறை உதவி இயக்குநர் கேட்டுக் கொண்டுள்ளார். 

இதனைத் தொடர்ந்து இந்திய கடலோர காவல்படையானது தனது கப்பல்கள் மற்றும் அருகிலிருந்த சரக்கு கப்பல்களைத் தொடர்பு கொண்டு ஆபத்திலிருக்கும் 

மீனவர்களை பாதுகாப்பாக மீட்டிட நடவடிக்கை மேற்கொண்டது . இந்திய கடலோர காவல்படையின் கப்பல் சமுத்திர பிரகாரி , சரக்குக் கப்பல்கள் டொவாடா , நவ்தேனு , நியூ எண்டர்பிரைஸ் ஆகிய கப்பல்கள் மீன்பிடி படகுகள் இருக்கும் இடத்திற்கு விரைந்துச் சென்று , ஆபத்திலிருந்த 22 விசைப்படகுகளிலிருந்து 220 மீனவர்களை மீட்டு கரைக்கு கொண்டு வருகின்றன. 

மேற்கண்ட 22 படகுகளையும் பத்திரமாக மீட்டு பாதுகாப்பாக அருகிலுள்ள கரைக்கு கொண்டு வர நடவடிக்கை எடுத்திட கடலோர காவல்படை கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது .

அரசு மேற்கொண்ட துரித நடவடிக்கையினால் புயல் பாதையில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ஆழ்கடல் விசைப்படகு மீனவர்கள் , இந்திய கப்பற்படை மற்றும் இந்தியக் கடலோர காவற்படையின் மூலம் பாதுகாப்பாக கரை திரும்பிட வழிவகை ஏற்பட்டுள்ளது. 

தற்போது ஆழ்கடலில் உள்ள படகுகளையும் பாதுகாப்பாக மீட்டிட தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

மீன்வளம் , பணியாளர் மற்றும் நிர்வாக சீர்த்திருத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

பப்ளிக் நியூஸ் டிவி செய்தியாளர் எம்.கிருஷ்ணகுமார்




Recommended For You
Alert: You are not allowed to copy content or view source