Public News Tv - காஷ்மீர் சட்டம் முதல் குடியுரிமை சட்டம் வரை திரும்பப் பெறும் வாய்ப்பு இல்லை பிரதமர் மோ

PUBLISHED:17-Feb-2020

வாரணாசி:

பிரதமர் மோடி நேற்று தனது சொந்த தொகுதியான வாரணாசிக்கு உத்தரபிரதேச மாநிலம் சென்றார்.

அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார்.

பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:-

நாட்டுக்கும், மக்களுக்கும் நன்மை அளிக்கக்கூடிய முடிவுகளை எனது அரசு எடுத்து வருகிறது.

இனிமேலும் எடுக்கும் காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்த 370-வது பிரிவு நீக்கமாக இருந்தாலும் சரி, குடியுரிமை திருத்த சட்டமாக இருந்தாலும் சரி, இவை நாட்டுக்கு நன்மை அளிக்கக்கூடியவை.

இந்த முடிவுகள் எடுப்பதற்காக நாடு நீண்டகாலமாக காத்திருந்தது.

எனவே, அனைத்து பக்கங்களில் இருந்து வரும் அழுத்தங்களை மீறி, நாங்கள் எடுத்த முடிவில் உறுதியாக இருக்கிறோம்.

தொடர்ந்து உறுதியாக இருப்போம் இந்த முடிவுகளை வாபஸ் பெறப் போவதில்லை.

இராமர் கோவில் கட்டுமானத்துக்காக ஒரு அறக்கட்டளை தொடங்கப்பட்டுள்ளது.

அது வேகமாக செயல்படும் அறக்கட்டளை தொடங்கப்பட்டதால், கட்டுமான பணியும் வேகம் எடுக்கும்.

நாட்டின் வளர்ச்சியை நோக்கியே எனது அரசு செயல்பட்டு வருகிறது.

தற்போது, மூன்றாம்நிலை, நான்காம் நிலை நகரங்கள் மீது கவனம் செலுத்தப்படுகிறது.

அங்கு உள்கட்டமைப்பு மேம்படுத்தப்படும்.

பட்ஜெட்டில், உள்கட்டமைப்புக்காக ரூ.100 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அவற்றில் பெரும்பகுதி, இந்த நகரங்களுக்கு செலவிடப்படும். ரூ.350 லட்சம் கோடி பொருளாதாரத்தை எட்ட சுற்றுலாவும் முக்கிய பங்காற்ற வேண்டும்.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

முன்னதாக, வாரணாசியில், ஸ்ரீஜகத்குரு விஸ்வரதயா குருகுலத்தின் நூற்றாண்டு நிறைவு விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டார்.

அங்கு நடந்த ஆரத்தியிலும் பங்கேற்றார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-

பல்லாண்டு கால சட்ட போராட்டத்துக்கு பிறகு, அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான முட்டுக்கட்டைகள் நீங்கி உள்ளன.

கட்டுமானத்துக்கு ஒரு அறக்கட்டளையை மத்திய அரசு அமைத்துள்ளது.

கோவிலுக்காக கையகப்படுத்தப்பட்ட 67 ஏக்கர் நிலத்தையும் மத்திய அரசு விரைவில் ஒப்படைக்கும்.

மக்கள், உள்ளூர் பொருட்களையே வாங்க வேண்டும். இறக்குமதி பொருட்கள் வாங்குவதை கைவிட வேண்டும்.

நமது பொருட்கள், சர்வதேச அங்கீகாரம் பெற்றவை. புதிய இந்தியாவை உருவாக்குவதில் தங்களது பங்களிப்பை செலுத்த வேண்டியது ஒவ்வொரு இந்தியனின் கடமை ஆகும்.

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில், உத்தரபிரதேச கவர்னர் ஆனந்திபென் படேல், முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத், கர்நாடக மாநில முதல்-மந்திரி எடியூரப்பா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பின்னர் நடந்த நிகழ்ச்சியில், வாரணாசியில் ரூ.1,254 கோடி மதிப்புள்ள 50 திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டி வைத்தார்.

முடிவடைந்த திட்டங்களை தொடங்கி வைத்தார்.

ஐ.ஆர்.சி.டி.சி.யின் 3-வது தனியார் ரெயிலான ‘மகா கால் எக்ஸ்பிரஸ்‘ ரெயிலை காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.

பண்டிட் தீனதயாள் உபாத்யாயா நினைவு மையத்தை நாட்டுக்கு அர்ப்பணித்தார். தீனதயாள் உபாத்யாயாவின் 63 அடி உயர சிலையை திறந்து வைத்தார்.

430 படுக்கைகள் கொண்ட சூப்பர் ஸ்பெஷாலிட்டி ஆஸ்பத்திரியை திறந்து வைத்தார்.

உத்தரபிரதேசத்தை சேர்ந்த 10 ஆயிரம் கைவினை கலைஞர்கள் தயாரித்த பொருட்களின் கண்காட்சியை மோடி திறந்து வைத்தார்.

அங்குள்ள கடைகளை சுற்றிப்பார்த்து, கைவினைக்கலைஞர்களுடன் உரையாடினார்.
Recommended For You
Alert: You are not allowed to copy content or view source