மறைந்த முதல்வர் ஜெயலலிதா இருந்திருந்தால் எனது மகள் உயிருடன் இருந்திருப்பாள் கதறும் தந்தை.

PUBLISHED:02-Sep-2017
! ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால் தன் மகளுக்கு மருத்துவம் படிக்க சீட்டும் கிடைத்திருக்கும்; மகளும் கிடைத்திருப்பாள் என்று அனிதாவின் தந்தை சண்முகம் கதறி அழுத காட்சி அங்கிருந்த அனைவரின் கண்கலங்கி கண்ணீர் விட வைத்தது. பிளஸ் 2 தேர்வில் அனிதா 1200-க்கு 1,176 மதிப்பெண்கள் பெற்றிருந்தார். ஆனால், நீட் தேர்வு முடிவில் இவர் 700-க்கு 86 மதிப்பெண்கள் மட்டுமே பெற்றதால் மருத்துவம் படிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. இவரது மருத்துவ கட் ஆப் மதிப்பெண் 196.75 ஆகும். தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த இவருக்கு பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் சேர்க்கை நடந்திருந்தால் மருத்துவம் படிக்க வாய்ப்பு கிடைத்திருக்கும். இந்நிலையில், தமிழக அரசு சார்பில் நீட் தேர்வை எதிர்த்து மாநில வழிக்கல்வி பயிலும் மாணவர்களுக்கு 85 சதவீத சிறப்பு இட ஒதுக்கீடு அளித்து அரசாணை வெளியிடப்பட்டது. ஆனால், இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசின் அரசாணை ரத்து செய்யப்பட்டது. இதற்கு எதிராக, தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. அனிதாவும் நீட் தேர்வுக்கு எதிராக வழக்குத் தொடர்ந்தார். ஆனால் இந்த வழக்குகளை தள்ளுபடி செய்து, நீட் தேர்வு மூலமே மாணவர் சேர்க்கை நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், நீட் தேர்வால் மருத்துவராக முடியவில்லையே என கடந்த சில நாள்களாக விரக்தியில் இருந்த அனிதா, நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். அனிதாவின் தற்கொலை மரணம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பல்வேறு தரப்பினரும் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பி வருகின்றனர். இந்நிலையில் தனது மகளின் மரணம் குறித்து சண்முகம் மிகவும் வேதனையுடன் கதறி அழுத காட்சி அங்கிருந்த அனைவரையும் கலங்கி அழ வைத்தது. அப்போது, ஜெயலலிதா மட்டும் இருந்திருந்தால், தனது மகளுக்கு மருத்துவம் படிக்க சீட் கிடைத்திருக்கும் என்று கதறி அழுத சண்முகம், அரசியல் போட்டியால் நீட் தேர்வை அனுமதி எனது மகளை கொன்றுவிட்டார்களை என்று கதறி அழுதார். நீட் தேர்வு குறித்து பேசினால் அதிமுகவினர் வந்து எங்களின் வீட்டை அடித்து நொறுக்கிவிடுவார்கள் என்று அமைதியாக இருந்துவிட்டோம். சாப்பாடு கூட சாப்பிடாமல் மூட்டை தூக்கி கஷ்டப்பட்டுத் தான் படிக்க வைத்தேன். அவர் நல்ல நிலைக்கு வர வேண்டும் என்று தான் 3 வேளையும் டீ குடித்தே தனது மகளை படிக்க வைத்தேன், ஆனால் எல்லாம் பாழாய் போய்விட்டது என்று கதறி அழுதார். மத்திய, மாநில அரசுகள் இந்த உயிர்பலிக்கு முழுமையாக பொறுப்பேற்க வேண்டும். மாநில அரசுகளின் உரிமைகளை பறிக்கும் வகையிலும், மாணவச் சமூகத்தின் கனவுகளை நொறுக்குகிற வகையிலும், நீட் தேர்வை வலிந்து திணித்த மத்திய அரசின் நடவடிக்கைகளையும், மத்திய அரசுக்கு பணிந்தும் இணங்கியும், மெத்தனமாக செயல்பட்ட தமிழக அரசின் போக்கினையும் கண்டித்து தமிழகம் முழுவதும் மாணவர்கள், அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.


Recommended For You
Alert: You are not allowed to copy content or view source