மது குடித்து தகராறு செய்த தந்தையால் மகள் தீக்குளிப்பு - டாஸ்மாக் திறந்த முதல் நாளில் நடந்த சோக

PUBLISHED:07-May-2020

மதுரை:-

மது குடித்துவிட்டு தகராறு செய்த கட்டிடத் தொழிலாளியால் மகள் தீக்குளித்தார்.

இதை தடுக்க முயன்ற தாயும் பலத்த தீக்காயம் அடைந்தார்.

டாஸ்மாக் கடை திறந்த முதல் நாளிலேயே இந்த பரிதாப சம்பவம் நிகழ்ந்துள்ளது.

மதுரை மாவட்டம், அலங்காநல்லூரைச் சேர்ந்தவர் சிவக்குமார் (42). இவர் கட்டிடத் தொழிலாளி. 

இவரது மனைவி பரமேஸ்வரி (35) , மகள் அர்ச்சனா (17) கல்லூரியில் படிக்கிறார்.

ஊரடங்கு காரணமாக சிவக்குமார் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்தார்.

டாஸ்மாக் கடை இன்று திறந்த நிலையில், தனது நண்பர்களுடன் சேர்ந்து சிவக்குமார் மதுகுடித்து இருக்கிறார்.

குடிபோதையில் மதியம் வீட்டுக்கு சென்றபோது, கணவன், மனைவிக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது.

அவர் மனைவியைத் தாக்க முயன்றதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் மனமுடைந்த மகள் அர்ச்சனா வீட்டிலுள்ள ஓர் அறைக்குள் சென்று உடலில் மண்ணெணைய் ஊற்றி தீக்குளித்தார்.

இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த தாய் பரமேஸ்வரி மகளைக் காப்பாற்ற முயன்றார்.

அப்போது, அவருக்கும் தீக்காயம் ஏற்பட்டது.

உயிருக்கு ஆபத்தான நிலையில் இருவரும் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து அலங்காநல்லூர் போலீஸார் சிவக்குமாரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

டாஸ்மாக் கடை திறந்த முதல் நாளிலேயே குடிவிட்டு தகராறு செய்த கணவரால் மனைவி, மகள் தீயில் கருகிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Recommended For You
Alert: You are not allowed to copy content or view source