கோயில் மேற்கூரை இடிந்து விழுந்ததில் ஒரு பெண் பலி 7 பேர் படுகாயம் கும்பாபிஷேக விழாவில் சோகம்.

PUBLISHED:05-Sep-2017

 

கோயில் மேற்கூரை இடிந்து விழுந்ததில் ஒரு பெண் பலி  7 பேர் படுகாயம் கும்பாபிஷேக விழாவில் சோகம்

திருவொற்றியூர்

எண்ணூரில் உள்ள ஸ்ரீ சித்தி விநாயகர் கோயில் கும்பாபிஷேக விழாவில், சிமென்ட் மேற்கூரை இடிந்து விழுந்ததில் பெண் பலியானார். 7 பேர் படுகாயம் அடைந்தனர். எண்ணூர் உலகநாதபுரத்தில் பிரசித்த பெற்ற ஸ்ரீசித்தி விநாயகர் கோயில் உள்ளது.  கடந்த சில நாட்களுக்கு முன்பு கோயில் கும்பாபிஷேகத்திற்காக திருப்பணிகள் நடந்தது.  திருப்பணியின் போது கோயில் வாசலில்  சிமென்டால் ஆன பூ வேலைப்பாடு கொண்ட மேற்கூரை தளம் அமைக்கப்பட்டது. பணிகள் முடிவடைந்ததை ஒட்டி நேற்று காலை விநாயகருக்கு சிறப்பு பூஜைகன் செய்யப்பட்டு கும்பாபிஷேகம் விழா சிறப்புடன் நடந்தது.  

கும்பாபிஷேகத்திற்கு வந்திருந்த பக்தர்கள் கோயில் முன்பு நின்று சாமி தரிசனம் செய்து கொண்டிருந்தனர். அப்போது கோயில் வாசலில் முன்பு, கடந்த சில தினங்களுக்கு முன்பு சிமென்டால் ஆன பூ வேலைப்பாடுடன் அமைக்கப்பட்ட மேற்கூரை தளம் திடீர் என இடிந்து  உடைந்து பக்தர்கள் மீது விழுந்தது. இதனால் பக்தர்கள் அலறி அடித்துக் கொண்டு வெளியே ஓடினர். இதில் எண்ணூரை சேர்ந்த கனகா (47), லலிதா (44), குழந்தை சாலினி (4), பத்மினி (35), காயத்ரி (34), பானு (45), சங்கீதா (35), உஷா (45) ஆகிய 8 பேர் பலத்த காயம் அடைந்தனர். உடனே அருகில் இருந்தவர்கள் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக திருவொற்றியூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  

அங்கு சிகிச் சை பலனின்றி கனகா பரிதாபமாக இறந்தார். மற்றவர்கள் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து எண்ணூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கனகா உடலை கைபற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த எண்ணூர் போலீசார், கோயில் திருப்பணி செய்த சிதம்பரத்தை சேர்ந்த சகோதரர்கள் சத்யாராஜ் (31) மற்றும் அவரது தம்பி செல்வராஜ் (29) கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
Recommended For You
Alert: You are not allowed to copy content or view source